நாமக்கல் லாரி தொழில் இயல்புநிலை திரும்புமா?

March 11, 2020
Rajesh Krishnan

ஃபாஸ்டேக் அட்டையின் அருமை பெருமைகளைச் சொல்லி சாலைப் போக்குவரத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக மத்யமர் குழுவினர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளச் செய்யும் வண்ணம் இருக்கின்றன.

இந்த மார்ச் மாதம் முடிந்து கணக்குவழக்குப் பார்க்கப்பட்டால் நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் குறைந்தது பத்து இருபது லாரி அதிபர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திவால் நோட்டிஸ் அளித்த பின்னரும் வங்கிகள் அதை ஏற்காமல் ஏதாவது ஒரு தொகையைக் கட்டி கடனை உயிர்ப்புடன் வைத்திருக்கும்படி நிர்பந்திப்பதாக வழக்கறிஞர்களும், பட்டயக் கணக்கர்களும் தெரிவிக்கின்றனர். புதிய வாராக்கடன் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டக்கூடாது என்ற அழுத்தம் காரணமாக பழைய வாராக்கடன்களுக்காக சொத்து ஏல நடவடிக்கைகளை வங்கிகள் விரைவுபடுத்தியிருக்கின்றன.

பேருந்து, லாரிகளுக்குக் கடன் வழங்குவதற்காகவே தனியாக கிளை வைத்திருக்கும் பிரபல NBFC நிறுவனங்கள் புதிய லாரிகளுக்கான கடன்களை நிறுத்தச் சொல்லவிட்டதாக தொழிலில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். தவணை (EMI) கட்டாத வண்டிகளை எடுத்துச்சென்று யாரிடம் விற்பது என்று அவர்களுக்கே தெரியாத நிலைமை.

ஒவ்வொரு பெரிய நிறுவனத்திலும் நூறு இருநூறு லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் கனரக லாரி போக்குவரத்தில் 40%-ஐ ஒரே மாவட்டம் வைத்திருக்கிறது என்ற பெருமை இன்று அதை பத்து இருபது வருடங்கள் பின்னோக்கி இழுத்துவிட்டிருக்கிறது.

கேஸ் டேங்கர் லாரிகளும் கடும் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் எரிவாயுக் குழாய் பணிகள் முடிவடைந்தால் கேஸ் டேங்கர் லாரி தொழில் கிட்டத்தட்ட முடிவுக்கே வந்துவிடும் நிலைமை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு விளை நிலங்களில் எரிவாயுக்குழாய் பதிக்கக்கூடாது என்று மறைமுகமாகத் தூண்டிவிட்டுத் தொழிலைத் தக்க வைத்திருக்க முடியும் என்று யாருக்கும் தெரியாத சூழலே நிலவுகிறது.

BS 6 குழப்பங்கள் தாண்டி, பதினைந்து ஆண்டுகள் ஓடிய கனரக வாகனங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற “நிபுணர்” யோசனைகள் செயல்படுத்தப்பட்டால் இன்னும் மோசமான பொருளாதார சரிவு ஏற்படும் என்பதே உண்மை.

நமது தொழில் முனைவோர்களிடமும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஊருக்கு ஒருவருக்கு ஒரு வெற்றிக்கதை இருக்கும்; பத்து தோல்விக் கதைகள் இருக்கும். ஆனால் நமது ஆட்கள் வெற்றிக்கதைகளை மட்டும் சொல்லிச் சொல்லி இருக்கும் அத்தனை பேரையும் உசுப்பிவிடுகிறார்கள். “அவர பாத்தியா, துணிஞ்சு ஒரு கோடி கடன வாங்கி லாரி போட்டாரு. மூணு வருசத்துல கடன நியூட்ரல் பண்ணட்டாப்ல. இன்னிக்கு பதினஞ்சு வண்டி ஓடுது, மாசம் அஞ்சு இலட்சம் நிக்குதாம்” என்று சொல்லிக்கொண்டே திரிவார்கள். இதைக் கேட்டு பலரும் இறங்கி தூண்டிலைக் கடித்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்தான். ஆனால் வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தால்?

1998-2002-வாக்கில் நாமக்கல் கோழிப்பண்ணை, லாரி, பைனான்ஸ் தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. தற்போது அதே நிலைமை வந்திருப்பதாக களத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு இறங்குமுகமும் தற்காலிகமானதுதான் என்றாலும் பள்ளி, கல்லூரி தொழில்களும் அதன் உச்சகட்டத்தை அடைந்துவிட்டதால் இந்த முறை இயல்புநிலை திரும்ப பல வருடங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.